தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்னென்ன?-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேச்சு


தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்னென்ன?-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேச்சு
x

தி.மு.க. ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார்.

சேலம்

திட்டங்கள்


சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் செய்த சில திட்டங்களை மட்டும் இங்கே உங்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். 50 ஆண்டு கால கனவாக இருந்த சேலம் ரெயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ரூ.1,553 கோடி செலவில் சேலம் உருக்காலை சர்வதேச அளவிற்கு உயர்த்தப்பட்டு புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம், சேலத்தில் ரூ.136 கோடி மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேலத்தில் புதிய ரெயில்வே மண்டலம், ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், சேலத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் என இப்படி கணக்கில் அடங்காத வகையில் பல்வேறு திட்டங்கள் கருணாநிதியின் ஆட்சியில்தான் இந்த சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.

மினி டைடல் பூங்கா

இந்த வரிசையில் இதைவிட அதிகமான சாதனைகளை செய்து கொடுப்பதற்கு இந்த ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 11.12.2021 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,242 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் என்னால் அறிவிக்கப்பட்டது.

ஆனைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்காவிற்கு 15 ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஒதுக்கப்பட்டு காணொலி காட்சியின் வாயிலாக கடந்த 19.5.2023 அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்தேன்.

கொலுசு பன்மாடி உற்பத்தி மையம்

அதன்படி, சேலம் அரியாகவுண்டம்பட்டியில் 24 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும், மாபெரும் ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

இதற்காக, சேலம் மேற்கு வட்டம், ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில் 119 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அங்கு ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கு நிலஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அந்த இடத்தில் ரூ.880 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

பல்நோக்கு விளையாட்டு அரங்கம்

சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஆகிய 3 நீர்நிலைகளில் ரூ.52 கோடியில் புனரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று ரூ.120 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாலமலை பகுதி மலைவாழ் மக்களின் 75 ஆண்டுகால கனவான சாலை வசதி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.31 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 17.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலையாக மாற்றும் வகையில் கடந்த 3.4.2023 அன்று பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெண்களுக்கான இலவச பஸ் வசதி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 கோடி முறை கட்டணமில்லா பேருந்து வசதியை பெண்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

உறுதுணையாக...

காலை உணவுத் திட்டத்தின்படி சேலத்தில் 7 ஆயிரத்து 953 மாணவ- மாணவிகள் காலை உணவு உண்கிறார்கள். புதுமைப் பெண் திட்டத்தில் சேலத்தில் 17 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அதிகளவில் சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 93 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 11 உழவர் சந்தைகள் மூலம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 675 உழவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு ஒரு கோடியே 97 லட்சம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர்.

இப்படி தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்ட வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த அரசுக்கு அனைத்து தரப்பு மக்களும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன், கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலசந்தர், மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், துணைமேயர் சாரதாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிகுமார், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அறிவழகன், துணை செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி தூயவன், சேகர், கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்குமார், டேனிஷ்பேட்டை ஊராட்சி தலைவர் நர்மதா தேவி முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, டாக்டர் வீரபாண்டி மலர்விழி ராஜா, வின்னர் விகாஸ் பள்ளியின் தாளாளர் செல்வம், கருப்பூர் பேரூராட்சி தலைவர் சுலோச்சனா சிலம்பரசன், செயல் அலுவலர் நீலாதேவி, நகர செயலாளர பி.லோகநாதன், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி தலைவர் கண்ணன், தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் சுதா பரமேஷ், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வக்கீல் சிவஞானம், லலிதா அருள் பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் சம்பத், மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கந்தசாமி, தலைவர் விஷ்வநாதன், துணைத்தலைவர் சுப்ரமணியன், துணை அமைப்பாளர்கள் ஆணைகவுண்டர், கதிர்வேல், வெங்கடேசன், ராஜவேல், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிலம்பரசன், மாவட்ட பிரதிநிதி சரவணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story