பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைத்தபோது அடிமை சாசனம் எழுதி கொடுத்தார்களா? எடப்பாடி பழனிசாமி கேள்வி


பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைத்தபோது அடிமை சாசனம் எழுதி கொடுத்தார்களா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தபோது அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து இருந்தார்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

ஈரோடு,

ஈரோடு வில்லரசம்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தேர்தலில் வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் செய்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெற்றி வாய்ப்பு

கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போதைய நிலவரம் குறித்து கட்சியினருடன் பேசினேன்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ரூ.484 கோடியில் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி சோதனை ஓட்டமும் நடத்தினோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த அத்தனை மாதங்கள் ஆன பின்னும் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை.

அடிமை சாசனம்

இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணத்தை வைத்து ஓட்டு வாங்க நினைக்கின்றனர். வாக்குச்சாவடி வாரியாக 200 அல்லது 300 பேரை கூட்டிக்கொண்டு போய் அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து விட்டதாக பேசுகிறார்கள். அப்படி என்றால் பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தபோது அடிமை சாசனம் செய்து விட்டா கூட்டணியில் இருந்தனர்.

போராடவில்லை

எட்டு வழிச்சாலை நாங்கள் அறிவித்தபோது எதிர்த்தார்கள். கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். பாலகிருஷ்ணன் திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று எட்டு வழி சாலை கொண்டுவரப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார் அதற்கு எந்த எதிர்ப்பு குரலும் இல்லை. வாயில் பிளாஸ்திரி ஒட்டி இருக்கிறார்களா?. மக்கள் வேதனை பட்டுக்கொண்டிருக்கின்றனர் இப்போது குரல் கொடுக்காத கூட்டணி கட்சிகள்தான் அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளன.

பச்சை பொய்

டெல்டா பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை. டெல்டா பகுதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குரல் கொடுக்கவில்லை. அப்படி என்றால் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளனர் என்பதுதானே உண்மை.

அ.தி.மு.க. எப்போதும் மக்களுக்காக போராடும் கட்சி. தேர்தல் அறிவிப்பில் கொடுத்ததை எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. நிச்சயமாக இந்த ஆட்சி சீக்கிரம் முடிந்துவிடும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story