தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் தி.மு.க. மகளிர் அணியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் தி.மு.க. மகளிர் அணியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுஞ்செயலை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி மற்றும் மகளிர் அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
சூளுரை ஏற்க வேண்டும்
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த சக்தி எவ்வளவு பெருமைக்கு உரியது என்பதை டெல்லியில் உள்ள பிரதமர் மோடி புரிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தில் பெண்கள் ஆர்ப்பரித்து எழுந்துள்ளார்கள். மணிப்பூரில் நடந்த சம்பவத்தை 2 மாதமாக மறைத்து விட்டு, தற்போது நாடகமாடுகிறார்கள். அங்குள்ள மலைசாதி மக்கள் தங்கள் உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடுகின்றனர். இதனால் அங்குள்ள பெண்களை இழிவுபடுத்தியுள்ளனர். இது மதவெறியால் நடந்துள்ளது. கிறிஸ்தவ மதத்தினரை தாக்கி வருகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் நமது குரல் ஒலிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த அறிவுறுத்தி உள்ளார். ஆகையால் நீங்கள் கண்டன குரலை எழுப்புங்கள். இந்த குரல் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு கேட்க வேண்டும். அதன் மூலமாக 2024-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பாசங்கர் (தூத்துக்குடி), கஸ்தூரி (கோவில்பட்டி), கோமதி (கருங்குளம்), வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம், தூத்துக்குடி மாநகர மகளிர் அணி தலைவர் ஜான்சிராணி, தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.