கரூர் மாவட்டத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
கரூர் மாவட்டத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரூர்
கருணாநிதி பிறந்தநாள் விழா
தமிழகம் முழுவதும் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தி.மு.க. கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார்
பின்னர் கரூர் மாநகராட்சி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது 99 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகளை அமைச்சர் வழங்கினார் இதில் மாநகராட்சி அதிகாரிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.