'தி.மு.க. குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு இளைஞரணியினர் பதிலடி கொடுக்க வேண்டும்'


தி.மு.க. குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு இளைஞரணியினர் பதிலடி கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:45 PM GMT)

‘தி.மு.க. குறித்து பொதுமக்களிடம் அவதூறு பரப்புபவர்களுக்கு இளைஞரணி தான் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்

செயற்குழு கூட்டம்


திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்கு அவைத்தலைவர்கள் மோகன், காமாட்சி ஆகியோர் தலைமை தாங்கினர். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கடந்த சட்டமன்ற தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். ஆனால் 2 அமைச்சர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு கொடுத்து இருக்கிறார்.


6,500 பணியிடங்கள்


இனி வரும் காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதன்படி கூட்டுறவுத்துறை மூலம் 6,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.


இதேபோல் சத்துணவு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சி பாகுபாடு கிடையாது. கட்சியில் இருப்பவர்கள் அனைவருக்கும் கட்சி பதவிகளில் வாய்ப்பு இருக்கிறது.


இளைஞர் அணியினர் பதிலடி


தி.மு.க. குறித்து பொதுமக்களிடம் அவதூறு பரப்புபவர்களுக்கு இளைஞர் அணியினர் தான் பதிலடி கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று இளைஞர்களை நான் சந்திப்பேன். அப்போது கட்சியின் வெற்றிக்கு உங்கள் உழைப்பு தான் காரணம். அந்த உழைப்பின் பரிசாக தான் துணை பொதுச்செயலாளர் பதவியை கட்சி தலைவர் எனக்கு கொடுத்திருக்கிறார்.


கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகள் தேடி வரும் என்று அவர்களிடம் தெரிவிப்பேன். உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகளை தேடி கொடுத்திருக்கிறோம்.


ஒவ்வொருவருக்கும் பதவி அவர்களை தேடி வரும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனவே கிராமப்புற மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகிகள், இளைஞரணியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அமைச்சர் பேசினார்.


மாலை அணிவித்து மரியாதை


கூட்டத்தில், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் ராஜாமணி, பிலால் உசேன், நாகராஜன், சுந்தரராஜன், மார்க்ரெட் மேரி, பொருளாளர்கள் சத்தியமூர்த்தி, விஜயன், மாநகர பொருளாளர் சரவணன், துணை செயலாளர் முகமது சித்திக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


முன்னதாக திண்டுக்கல்லில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Next Story