விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்


விழுப்புரம் மாவட்டத்தில்    தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்    அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
x

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவரும் ஊராட்சிக்குழு தலைவருமான ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை வினியோகித்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் இளைஞர்களை கட்சியில் அதிகளவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக மத்திய மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் இளைஞர் அணியில் இணைக்க வேண்டும். இதற்காக வேறு கட்சியில் இருப்பவர்களை போலியாக சேர்த்துவிடக்கூடாது. உண்மையாக தி.மு.க.வில் இணைய விருப்பம் உள்ளவர்களை இணைக்க வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள எண்ணற்ற திட்டங்களை எடுத்துக்கூறி, 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஈர்க்க வேண்டும். இதற்கு ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் அனைவரும் இளைஞர் அணியினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தயா.இளந்திரையன், அன்பு, ராஜவேல், பாலாஜி, கலைவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story