''தி.மு.க.வின் கைக்கூலியான ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழிந்து விட்டது'' -எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு


தி.மு.க.வின் கைக்கூலியான ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழிந்து விட்டது -எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
x

‘‘தி.மு.க.வின் கைக்கூலியான ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழிந்து விட்டது. கட்சி அலுவலகத்திலேயே கொள்ளையடிக்கும் அவர் விசுவாசியா?’’ என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

சென்னை,

அ.தி.மு.க. சிறப்படைய, வலிமை அடைய வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். சில எட்டப்பர்கள் கட்சியில் இருந்துகொண்டு களங்கம் கற்பித்துக்கொண்டிருக்கிற நிலையில், எதிரிகளோடு உறவு வைத்திருக்கக்கூடிய நிலையில், அதையெல்லாம் முறியடிக்கக்கூடிய வகையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என முடிவு எடுத்து தீர்மானமாக நிறைவேற்றி தந்திருக்கிறீர்கள். இடைக்கால பொதுச்செயலாளராக என்னை நியமித்துள்ளீர்கள்.

இந்த கட்சிக்காக நான் கடுமையாக உழைப்பேன். நீங்கள் எண்ணும் எண்ணத்தை நிறைவேற்றுவேன். தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டி வெற்றிக்கொடி நாட்டுவோம். அதுதான் நமது லட்சியம். இந்த கட்சியில் பதவியை பெற்று எட்டப்பனாக இருந்து இந்த கட்சியை அழிக்க நினைக்கிறவர்கள் வெளியேறலாம்.

தி.மு.க. என்பதே குடும்ப ஆட்சி

மக்களை பற்றி சிந்திக்காமல் தனது வீட்டில் உள்ள மக்களை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். தி.மு.க. என்பதே குடும்ப ஆட்சி. அங்கு ஒரு முதல்-அமைச்சர் அல்ல, அவரது குடும்பத்தில் பல முதல்-அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தை பலமுறை நமது மூத்த நிர்வாகிகள் சந்தித்து சமாதானம் பேசினார்கள். பொறுப்புக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஒற்றை தலைமையாக இருக்கவேண்டும் என்ற மக்களின், தொண்டர்களின் எண்ணத்தை வலியுறுத்தினர். இதற்கு அவர் கடைசிவரை இசைவு தரவேயில்லை.

'எதற்கெடுத்தாலும் நான் விட்டுக்கொடுக்கிறேன் என்கிறார், ஓ.பன்னீர்செல்வம். உண்மையை சொல்லப்போனால் நாங்கள்தான் விட்டுக்கொடுக்கிறோம். அவர் எதையுமே விட்டுக்கொடுக்கவில்லை. அ.தி.மு.க. பிரிந்த நேரத்தில் 1989-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா போடியில் களமிறங்கினார். அப்போது அவருக்கு எதிராக களமிறங்கிய வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு முதன்மை ஏஜெண்டாக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம், எப்படி ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவராக இருக்கமுடியும்?

தி.மு.க.வின் கைக்கூலி ஓ.பன்னீர்செல்வம்

எனக்கு கட்சி தான் உயிர். ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் உறவு வைத்திருக்கிறார். இப்படி இருந்தால் இந்த கட்சி எப்படி ஆட்சிக்கு வரமுடியும்? கட்சி பொதுக்குழு கூட்டம் நடக்கக்கூடாது என்று போராடினார். எந்த கட்சி தலைவராவது இப்படி செய்வார்களா?.

ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குறியாக இருப்பார். அவரது மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்.

இப்போது நமது கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ரவுடிகளுடன் சென்றுள்ளார். அங்குள்ள கோப்புகளை கைப்பற்றியுள்ளனர். லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அடித்து உதைத்து, கதவுகளை உடைத்திருக்கிறார்கள். இவரா கட்சிக்கு விசுவாசமானவர்? கட்சியின் அலுவலகத்தில் கொள்ளையடிக்கும் அவர் விசுவாசியா? (அனைவரும் இல்லை என்கிறார்கள்). மாவட்ட செயலாளர்கள் உள்பட 25 பேர் தாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே போலீசாரிடம் கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி நிர்வாகிகள் மனு கொடுத்திருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. எந்த பாதுகாப்பையும் போலீசார் வழங்கவில்லை.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அரங்கேற்றியுள்ள இந்த நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க.வுடன் ஓ.பன்னீர்செல்வம் வைத்திருக்கும் உறவு இதன் மூலம் வெட்டவெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அவரது முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் கைக்கூலியாக இருந்து செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆறுதல்

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்தவர்களை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேதனை

இன்று (நேற்று) நடந்ததை வைத்து பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மையானது என்று தெரியவந்துள்ளது. ஆனால் போலீஸ் கமிஷனர் முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த காரணத்துக்காக அவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது மட்டுமல்ல, ரவுடிகளை அழைத்து வந்து கட்சிக்காரர்களை தாக்கிய சம்பவம் உண்மையாக வேதனை அளிக்கிறது. கண்டனத்துக்குரியது.

ஓ.பன்னீர்செல்வம் சுயநலவாதி

தன் கட்சியினரை கொடூரமான முறையில் தாக்குவதற்கு, மனசாட்சி இல்லாத மிருகத்தனமான ஒரு மனிதனுக்குத்தான் இந்த எண்ணம் வரும். ஓ.பன்னீர்செல்வம் சுயநலவாதி. அவர் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என்று நினைத்தோம், அதற்காக இருக்கை எல்லாம் போட்டு வைத்திருந்தோம். ஆனால் அவர் வரவில்லை.

அதுமட்டுமில்லை ரவுடிகளை அழைத்துவந்து, 3 மீன்பாடி வண்டியில் கற்களை ஏற்றி வந்து எங்களுடைய கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் 4 ஆயிரம் பேரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். பாதுகாப்பு வந்த போலீசாரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு, எங்கள் கட்சி நிர்வாகிகளை அடித்தார்களே தவிர, கல் எறிந்த ரவுடிகளை தடுத்து நிறுத்தவில்லை. இது கொடூரமானது.

கண்டனம்

பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் நானும், கட்சியின் மூத்த முன்னோடிகளும் தலைமைக்கழகத்தில் உள்ள 2 தலைவர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக இருந்தது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு, ஆட்சியில் உள்ள மு.க.ஸ்டாலின் அரசும், அவரோடு உறவு வைத்திருந்த முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது அ.தி.மு.க.வுக்கு மட்டும் வந்தது என்று நினைக்கவேண்டாம். தமிழகத்தில் இருக்கும் எல்லா கட்சிகளுக்கும் இதே நிலைதான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று நான் கூறி வந்தது, இன்று நிரூபணமாகிவிட்டது.

துரோகி

பிரதான எதிர்க்கட்சி, 31 ஆண்டுகள் இந்த மண்ணை ஆட்சி செய்த கட்சிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை மக்கள் உணரவேண்டும். அ.தி.மு.க.வை ஒடுக்க வேண்டும், அழிக்கவேண்டும் என்பதற்காக துரோகிகளுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட திட்டம் தான் இது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான நிகழ்வு தமிழ் மண்ணில் அரங்கேறியிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு தி.மு.க.வும், துரோகியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் தான்.

போலீஸ் பாதுகாப்போடு அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ரவுடிகள் புகுந்து, அங்கிருந்த ஆவணங்களை வாகனங்களில் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமானது. நிச்சயமாக காலம் மாறும். யார் தப்பு செய்தாலும் அவர்களுக்கு, தக்க பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story