கிணத்துக்கடவில் பஸ்கள் நின்று செல்லுமா?


கிணத்துக்கடவில் பஸ்கள் நின்று செல்லுமா?
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவுக்குள் வராமல் மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்களால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, பஸ்கள் நின்று செல்லுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவுக்குள் வராமல் மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்களால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, பஸ்கள் நின்று செல்லுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நிற்காமல் செல்லும் பஸ்கள்

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதி உள்ளது. இந்த வழியாக கோவை, பொள்ளாச்சியில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி மதுரை, கும்பகோணம், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு செல்கிறது. இதில் கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் சில அரசு, தனியார் பஸ்களை தவிர மற்ற பஸ்கள் கிணத்துக்கடவுக்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்கிறது.

பிற மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக செல்கின்றன. இதனால் கண்டக்டர்கள் பயணிகளை பொள்ளாச்சியில் இறக்கி விடுகின்றனர். இதனால் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொள்ளாச்சியில் இருந்து மீண்டும் பஸ் பிடித்து, கிணத்துக்கடவுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தனியார் மற்றும் அரசு பஸ் மேலாளர்களுக்கு தகவல் கொடுத்து அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

கிணத்துக்கடவில் 2.5 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அமைத்த பின்னர், பல பஸ்கள் ஊருக்குள் வருவதில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் விரைவு பஸ்கள் கிணத்துக்கடவில் நிற்காமல் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன. மேலும் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாது என்று கூறி மேம்பாலம் வழியாக சென்று ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கி விடுகின்றனர். அதேபோல் கோவை-பொள்ளாச்சி செல்லும் சில தனியார் பஸ்கள் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன.

அந்த பஸ்களில் கிணத்துக்கடவு டிக்கெட் கேட்டால் கண்டக்டர் கிணத்துக்கடவு ஊருக்கு போகாது, மேம்பாலத்தில் சென்று விடும் என்று கூறுகிறார்கள். மேம்பாலம் கட்டப்பட்டதினால் விரைவு பஸ்கள் உள்ளிட்ட சில பஸ்கள் ஊருக்கு வராமல் மேம்பாலத்தில் செல்வது கவலையாக உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவு ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story