ஆன்லைனில் விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்; போலீஸ் அதிகாரி பேச்சு

ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தெரிவித்தார்.
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
செல்போன்களில் மர்மநபர்கள் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போன்று பேசி வங்கி தொடர்பான விவரங்களை கேட்பார்கள். மேலும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. நம்பரை கேட்பார்கள். அவ்வாறு கேட்டால் ஓ.டி.பி. எண்ணை கொடுக்க வேண்டாம். இணைப்பை துண்டித்து விடுங்கள். வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை யாரிடமும் கூற வேண்டாம். தெரியாத எண்களில் இருந்து வரும் குறுந்தகவலை நம்ப வேண்டாம். ஆன்லைன் முதலீடு என்று கூறி பணத்தை அபகரித்து விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீடுகளை நம்ப வேண்டாம்.
ஆன்லைன் விளையாட்டுகள்
அனைத்து நிறுவனம் தொடர்பான வாடிக்கையாளர் சேவை மைய எண்களை இணையத்தில் தேட வேண்டாம். அந்த எண்கள் மர்மநபர்கள் பயன்படுத்தும் போலி எண்கள். உங்கள் பிரச்சினையை நிவர்த்தி செய்வதாக சேவை மைய அதிகாரிகள் போன்று பேசி பணத்தை ஏமாற்றி விடுவார்கள். மேலும் கடன் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
தேவையற்ற இணையதளங்களில் சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். ஆன்லைன் வேலை, பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடி செய்வார்கள். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். அதன் மூலம் பணத்தை இழக்க வாய்ப்பு உள்ளது. பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.