அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது - டாக்டர் ராமதாஸ்


அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது -  டாக்டர் ராமதாஸ்
x

அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என சி.எம்.டி.ஏ.வுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஒரு அங்கமாக உள்ள 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.) முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை மாநகரில் வெள்ளத்தை ஏற்படுத்தும் சக்தியாக அடையாறு மாறி உள்ள நிலையில் இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டப்படுவது கவலை அளிக்கிறது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் பலமுறை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி அடையாறு ஆற்றில் வெள்ளநீரை திறந்துவிடும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன.

இத்தகைய சூழலில் அடையாறு ஆற்றின் நீரோட்டத்துக்கு தடையாக இருப்பதாக கூறப்படும் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளையோ, தொழிற்சாலைகளையோ கட்ட அனுமதித்தால் எதிர்காலத்தில் சென்னைக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதை சென்னை தாங்காது. எனவே இந்த திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story