'மம்மி-டாடி' என அழைக்காதீர்கள் நமது தாய்மொழியை ஆதரிக்க வேண்டும்: எந்த மொழியையும் திணிக்க கூடாது


மம்மி-டாடி என அழைக்காதீர்கள் நமது தாய்மொழியை ஆதரிக்க வேண்டும்: எந்த மொழியையும் திணிக்க கூடாது
x

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வழங்கி வரவேற்றார். அருகில் அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உள்ளனர்.

நமது தாய்மொழியை ஆதரிக்க வேண்டும் என்றும், எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆற்றிய உரை வருமாறு:-

ஜனநாயகத்தில் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் இதை கவனிக்க வேண்டும். வெவ்வேறு பணியில் இருக்கும் மக்களுக்கு வெவ்வேறு கொள்கைகள் இருக்கும். ஆனாலும் அவர்கள் அனைவரும் மதிக்கப்பட வேண்டும்.

நாம் அரசியலில் மாறுபட்டவர்களே தவிர எதிரிகள் இல்லை என்பதை உணர வேண்டும்.

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனுடன் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது போலீசாரால் சரியாக அவர்கள் நடத்தப்படவில்லை. இதுபற்றி அப்போதைய பிரதமரிடம் நான் பேசுவதற்கு தயங்கவில்லை. அரசியல்மாச்சரியங்கள் எங்களுக்குள் இருந்தாலும் அந்த சிக்கலான நேரத்தில் நான் அவர்கள் பக்கம்தான் நின்றேன். ஏனென்றால் நாம் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் மதிப்பவர்கள்.

பதவி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான கருவியே தவிர, அதிகாரத்தை அனுபவிக்கும் இடமல்ல என்று கருணாநிதி கூறுவார். பதவி என்பது முட்களால் ஆன கிரீடம் போன்றது.

இந்தியா தற்போது நிலையான பலமான நாடாக விளங்குகிறது. பல கட்சிகள் பல மாநிலங்களை ஆண்டாலும் நாம் ஒருங்கிணைந்து மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். கீழ் நிலை மக்களை எப்போதுமே கவனத்தில் கொள்ள வேண்டும். மாநிலம் வளர்ந்தால்தான் நாடு வளரும்.

மாநிலத்தின் முன்னேற்றம் இல்லாமல் நாடு தானாக முன்னேற்றம் காண முடியாது. மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதே என் எண்ணம். அதில் அரசியல் வேறுபாடுகளை காட்டக் கூடாது.

பல பகுதி, சாதி, மதம், இனத்தை நாம் கொண்டிருக்கிறோம். நமது தாய் மொழி, தாய் நாட்டை எந்த வகையிலும் மறக்கக்கூடாது. தாய்மொழி நமது கண்ணின் பார்வை போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவை. பார்வை இல்லாவிட்டால் கண்ணாடியால் எந்த பயனும் இல்லை.

வீட்டில் தாய் மொழியில் பேசுங்கள். 'மம்மி, டாடி' என்றழைக்கும் கலாசாரத்தை விட்டுவிடுங்கள். அம்மாவை தாய்மொழியில் அழைத்தால் அந்த குரல் இதயத்தில் இருந்து வரும். நமது தாய் மொழி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் வேறு மொழியில் உரையாடலாம். மற்ற மொழிகளை படிப்பதில் தவறு இல்லை. ஆனால் தாய்மொழியை படித்துவிட வேண்டும்.

உயர் பதவிக்கு வந்தாலும் எனது பாரம்பரிய உடையை கூட நான் மாற்றிக்கொள்ளவில்லை. நாம் எந்த மொழியையும் எதிர்க்க கூடாது. ஆனால் நமது தாய் மொழியை நாம் ஆதரிக்க வேண்டும். தற்போது சில முரண்பாடுகள் நிலவுகின்றன.

எந்த மொழியையும் திணிக்க கூடாது. அதே நேரத்தில் மொழிகளை எதிர்க்கவும் கூடாது. அதிக மக்கள் பேசும் மொழியை படிக்க வேண்டுமானால் படித்துக் கொள்ளுங்கள். சர்வதேச மொழியையும் படியுங்கள். ஆனால் முதலில் தாய்மொழியை சிறப்புடன் படியுங்கள்.

தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது புகழ்பெற்ற தந்தை கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை மற்றும் பணிகளால் வழி நடத்தப்படுவார் என்ற உறுதி எனக்கு உள்ளது.

அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை தமிழகம் பதிவு செய்யும் என்றும், கூட்டாட்சி உணர்வு மற்றும் கூட்டாட்சியில் போட்டித்தன்மை என்ற உணர்வோடு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் ஆண்டுகளில் தனது உண்மையான திறனை இந்தியா உணரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெங்கையா நாயுடு, விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் முதலில் சிறிது நேரம் தமிழில் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து ''மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலையை திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

மேலும் 'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும் அரிது' என்ற திருக்குறளையும் தமிழில் அவர் வாசித்தார். அதை அனவரும் கைதட்டி ரசித்தனர்.


Next Story