மேகதாது பற்றி விவாதிக்க கூடாது: பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்தின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று அந்த அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்கும்படி கடந்த 17.6.2021 அன்று உங்களிடம் கொடுத்த மனுவில் கோரியிருந்தேன்.
இந்த திட்டத்திற்காக கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை எதிர்த்து தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 21-ந்தேதியன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய ஜல்சக்தித் துறை மந்திரியிடம் அளிக்கப்பட்டது. தமிழகத்திடம் இருந்து ஒப்புதல் பெறாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை கடந்த மே 26-ந்தேதியன்று உங்களிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.
மிகுந்த பாதிப்பு
நிலைமை இப்படி இருக்கும் சூழ்நிலையில், மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து 17-ந்தேதி நடக்கவுள்ள 16-வது கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சி.டபுள்யூ.எம்.ஏ.) முன்மொழிந்துள்ளது. இது, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது. குடிநீருக்கும், பாசனத்திற்கும் காவிரி நீரைத்தான் தமிழக அதிகம் நம்பி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
நீண்டகால சட்ட போராட்டத்திற்கு பிறகுதான் காவிரி நீர் விவகாரத்தில் தீர்வு கிடைத்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவு, நாங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றாலும்கூட, ஒதுக்கப்பட்ட பங்கீட்டை வைத்து மேலாண்மை செய்து வருகிறோம். அதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், அது எங்களை மிகவும் பாதிப்படையச் செய்துவிடும். எனவேதான் இது எங்களின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது.
நிலுவையில் வழக்குகள்
சுப்ரீம் கோர்ட்டு 16.2.2018 அன்று பிறப்பித்த உத்தரவுகளை மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமல்படுத்த வேண்டும். அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளை அந்த ஆணையம் மேற்கொள்ளக்கூடாது.
ஆனால் 16-வது கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை சேர்த்திருப்பது, மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் அதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்தின் அடிப்படையிலானது என்று கூறப்படுகிறது.
இது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. மேலும், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானதாகவும், தமிழகத்தினால் ஏற்க முடியாததாகவும் உள்ளது. மேலும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 3 வழக்குகள் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினையை எடுப்பது அநீதியானதாகும். கடந்த 7-ந்தேதி மற்றொரு வழக்கையும் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்.
தகுந்த அறிவுரை
எனவே மேகதாது விவகாரத்தை பற்றி விவாதிப்பதற்கு ஆணையம் அவசரம் காட்டுவதை நாங்கள் ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் எங்களின் மனுக்கள் பற்றிய விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பதாகவே இந்த நடவடிக்கையை எடுப்பது, சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை திசை திருப்புவது போன்றதாக அமைந்துவிடும்.
எனவே, சுப்ரீம் கோர்ட்டில் எங்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அதில் முடிவு கூறப்படும் வரை மேகதாதுவின் விரிவான திட்ட அறிக்கையை பற்றி விவாதிப்பதை தள்ளிப்போட வேண்டும். எனவே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு இதுதொடர்பான தகுந்த அறிவுரையை வழங்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.