டாஸ்மாக் போல் வருமானம் வந்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
டாஸ்மாக் போல் வருமானம் வந்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
தமிழக வனப் பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்னிய மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அன்னிய மரங்கள் பரவியுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கும் எனவும், இந்த அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடந்து வருவதாகவும், இதுதவிர ரசாயண முறைப்படி கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்னிய மரங்களை அகற்ற 536 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும்
வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அன்னிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒத்துக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதை தவிர, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அன்னிய மரங்களை அகற்றும் பணியை ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களிடம் ஏன் வழங்க கூடாது எனவும், அரசின் திட்டங்கள் காகிதங்களில் தான் உள்ளது எனவும், செயலில் எதுவுமில்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வேலை உறுதி திட்ட நிதி பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டபின், ஏன் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர். அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்துவிடும் என்றும் எச்சரித்தனர்.
பின்னர், அன்னிய மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாகவும், எவ்வளவு பரப்பில் அன்னிய மரங்கள் அகற்றப்பட உள்ளது என்பது குறித்த நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் நிர்வாகம் போல வருமானம் தருவதாக இருந்தால் வனத் துறை மீது அக்கறை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.