கடத்தூரில்போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒருவர் எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் மருத்துவ குழுவினர் கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருந்து பாட்டில்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் பன்னீர் என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவத்துறை அனுமதியின்றி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் அருண் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.