ஆண்டிப்பட்டி அருகே ஓமியோபதி டாக்டர் கைது; போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


ஆண்டிப்பட்டி அருகே ஓமியோபதி டாக்டர் கைது; போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 April 2023 8:45 PM GMT (Updated: 26 April 2023 8:45 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே அலோபதி மருத்துவம் பார்த்த ஓமியோபதி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே அலோபதி மருத்துவம் பார்த்த ஓமியோபதி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஓமியோபதி டாக்டர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, ரெங்கராம்பட்டி கிராமம். இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கேரளாவை சேர்ந்த ஓமியோபதி டாக்டரான பாபு (வயது 62) என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவர் அலோபதி மருத்துவமும் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் டாக்டர் பாபுவை நேற்று போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். டாக்டர் பாபு கைது செய்யப்பட்ட தகவல் ரெங்கராம்பட்டி கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் டாக்டருக்கு ஆதரவாகவும், அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவரை விடுவிக்கக்கோரி கோஷமிட்டனர்.

எச்சரித்து அனுப்பினர்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், போலீஸ் நிலையத்திற்கு வந்தார். மேலும் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஓமியோபதி டாக்டர் அளித்த சிகிச்சையால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. பணம் இல்லாமல் சென்றால் கூட அவர் மருத்துவம் பார்ப்பார். எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் அவரை விடுவிக்கும் வரை கலைந்துபோக மறுத்தனர்.

இதையடுத்து டாக்டர் பாபுவை போலீசார் விடுவித்தனர். இருப்பினும் ஓமியோபதி மருத்துவத்தை தவிர அலோபதி உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என்று பாபுவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் கிராம மக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஓமியோபதி டாக்டர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story