மகனை சிகிச்சை அளிக்க வைத்து விட்டு ஒகேனக்கல் சுற்றுலா சென்ற அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர்
மகனை சிகிச்சை அளிக்க வைத்து விட்டு ஒகேனக்கல் சுற்றுலா சென்ற அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சஸ்பெண்டு செய்ப்பட்டார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த கவுந்தப்பாடி பஞ்சாயத்து, சலங்கபாளையம் பேரூராட்சி ,பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி, ஓடத்துறை, பெரியபுலீயூர், ஆலத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவராக குருப்பநாய்கன் பாளையத்தை சேர்ந்த தினகரன் (57) உள்ளார். இவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக், வினோத்குமார், சரவணக்குமார், சண்முகவடிவு ஆகிய மருத்துவர்களும், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை மருத்துவர் தினகரன் கடந்த ஞாயிற்றுகிழமை முறையாக விடுப்பு எடுக்காமல் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
மருத்துவம் படித்துவிட்டு வீட்டு ஹவுஸ் சர்ஜனாக உள்ள மகன் அஸ்வின் (24) என்பவரை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறி சென்றுள்ளார். அஸ்வினும் காலை முதல் இரவு வரை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் வழங்காமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற முருகேசன் தலைமை மருத்துவர் குறித்து விசாரித்தபோது அவர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும், தான் பவானி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியில் உள்ளதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.
ஆனால் அவர் அரசு மருத்துவராக பணி செய்யவில்லை என்பதும் தலைமை மருத்துவர் தினகரன் மகன் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளிவரவே கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தலைமை மருத்துவர் தினகரன் ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முன்னிலையில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை ஏற்காத இணை இயக்குநர் கோமதி நேற்று கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செவிலியர்கள், பணியாளர்கள், தலைமை மருத்துவர் தினகரன் உள்பட அனைவரிடமும் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தலைமை மருத்துவர் தினகரன், அவரது மகனை சிகிச்சை பார்க்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் சில மருத்துவர்கள் பணியில் இல்லாததும் தெரிய வந்தது. இந்த விசாரணை அறிக்கையை மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மகனை சிகிச்சை பார்க்க வைத்த கவுந்தப்பாடி தலைமை மருத்துவர் தினகரன், பணி நேரத்தில் பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.