ஆடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டரை நியமிக்க வேண்டும்
ஆடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திருவிடைமருதூர்;
ஆடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பேரூராட்சி கூட்டம்
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி கூட்டம் தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சக்திவேல் வரவேற்றார். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டரை நியமிக்க வேண்டும், மகப்பேறு சிகிச்சைகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மெஷின் மற்றும் எக்ஸ்ரே மெஷின் ஆகிய எந்திரங்கள் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட வேண்டும். ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
புதிய கட்டிடம்
புறநோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் கட்டிடத்தை புதிதாக கட்டித்தர வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தரக்கோரி மருத்துவ சுகாதார துறைக்கு கடிதம் அனுப்புவது, பல்வேறு வகைகளில் முடிவடைந்த பணிகள் குறித்தும் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் விளக்கமளித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணி சிவக்குமார், சுகந்தி சுப்ரமணியன், பரமேஸ்வரி சரவணக்குமார், சாந்திகுமார், கண்ணன், ம.க. பால் தண்டாயுதம், மாலதிசிவக்கொழுந்து, குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஷமீம்நிஷாஷாஜஹான் நன்றி கூறினார்.