கோவிலுக்குள் மாற்று சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோவிலுக்குள் மாற்று சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

உலகம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் கோவிலுக்குள் மாற்று சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் கண்மாய்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில், விநாயகர் கோவில் என 2 கோவில்கள் உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு கோவில் திருவிழாவின்போது, இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் விநாயகர் கோவிலை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களது கோவில் என உரிமை கொண்டாடுகின்றனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல், கோவிலை பூட்டி வைக்கும் சூழலும் உள்ளது. எனவே இரு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களுக்கு என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்? அரசியலமைப்பை மதித்து நடப்பதால் வழிபாட்டு உரிமைகள் நடைமுறையில் உள்ளன. உலகம் பலவற்றையும் நோக்கி வளர்ச்சியடைந்து வரும் இந்த நேரத்தில், கோவிலுக்குள் மாற்று சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா?" என கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story