சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாவலர்கள் அறையின் கீழே சிக்கிக்கொண்ட நாய் மீட்பு


சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாவலர்கள் அறையின் கீழே சிக்கிக்கொண்ட நாய் மீட்பு
x

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாவலர்கள் அறையின் கீழே சிக்கிக்கொண்ட நாய் மீட்கப்பட்டது.

சென்னை

சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்பகுதியில் பாதுகாவலர்களுக்காக பிரத்யேக தற்காலிக அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கும், தரைக்கும் இடையே குறைவான இடைவெளியே உள்ளது. நேற்று காலை சென்டிரல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்துக்கும், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் என பயணிகள் வேக, வேகமாக மாறி, மாறி சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது நாய் ஒன்று பயணிகளை பார்த்து குரைத்தப்படியும், துரத்தியவாறும் அங்கும், இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது பாதுகாவலர்கள் அறை அருகே ஓடிய நாய் அங்கு வசமாக மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தது. இதையடுத்து மெட்ரோ ரெயில் நிலைய பாதுகாவலர்கள் நாயை வெளியே கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரும்பு கம்பியால், பாதுகாவலர்கள் அறையை தூக்கினார்கள். ஆனாலும் நாயை மீட்கமுடியவில்லை. இதையடுத்து குழாய் மூலமாக நாய் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது உத்வேகத்தில் நாய் பதுங்கி, பதுங்கி வெளியே வந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பாதுகாவலர்கள் அறையின் கீழே மாட்டிக்கொண்ட நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. அதன்பிறகே பாதுகாவலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story