ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம்


ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2023 11:27 PM IST (Updated: 3 Jun 2023 10:22 AM IST)
t-max-icont-min-icon
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடி வரும் நாய்களை கூண்டு வைத்துப் பிடிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வனத்துறை கண்காணிப்பு

கடந்த ஆண்டு உடுமலையையடுத்த பெரியகோட்டை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்துக் குதறப்பட்டன.இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மீண்டும் ஆடுகள், கன்றுகள் உள்ளிட்டவை கடித்து குதறி கொல்லப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் வனத்துறையினர், கால்நடைகளை வேட்டையாடும் மர்ம விலங்குகள் வன விலங்குகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் கூட்டமாக வரும் நாய்கள் மனிதர்களின் கண் முன்னே ஆடுகளை வேட்டையாடியுள்ளது. மேலும் அவை மனிதர்களையும் கடிக்கத் துரத்தியுள்ளது. இந்தநிலையில் துங்காவி அருகிலுள்ள மலையாண்டிப்பட்டினம் பகுதியில் பொன்னுச்சாமி, ஈஸ்வரசாமி ஆகிய விவசாயிகளின் தோட்டத்துக்குள் நள்ளிரவில் நுழைந்த நாய்கள் 2 ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளன.தொடர்ச்சியாக ரத்த வேட்டையாடி வரும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

சுட்டுக் கொல்லுங்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கால்நடைகளை வேட்டையாடுவது வனவிலங்குகளாக இருந்தால் கூட வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து விடுவார்கள்.மேலும் அதனை வனப்பகுதியில் கொண்டு போய் விடுவதன் மூலம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதேநேரத்தில் ரத்த வெறியுடன் சுற்றித் திரியும் நாய்கள் தான் கால்நடைகளை வேட்டையாடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நாய்களைப் பிடிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒருவேளை கூண்டு வைத்தோ அல்லது வேறு வழிகளிலோ அந்த நாய்களைப் பிடிப்பதாகவே வைத்துக் கொள்வோம்.அவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்களை என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. நாய்களை வனப்பகுதியில் விடுவது சாத்தியமில்லை. வேறு பகுதியில் கொண்டு போய் விட்டால் அந்த பகுதியிலும் இதே பிரச்சினை தொடரும்.இந்த நாய்களைக் கொல்வதற்கு ஒருசில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.எனவே நாய்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறும் நிலையே உள்ளது. கால்நடைகளுக்கோ, பொதுமக்களுக்கோ அச்சுறுத்தல் எற்படும்போது புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. எனவே கால்நடைகளை வேட்டையாடும் நாய்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.

இல்லாவிட்டால் படிப்படியாக கால்நடைகளை வேட்டையாடும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவை மனிதர்களையும் வேட்டையாடும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story