ஆடுகளை வேட்டையாடும் நாய்கள்


ஆடுகளை வேட்டையாடும் நாய்கள்
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் ஆடுகளை தெருநாய்கள் வேட்டையாடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

5 ஆடுகளை கொன்ற வேட்டை நாய்கள்

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் சாகுபடி பணிகளுடன் சேர்த்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக வேட்டை நாய்கள் ஆடு, மாடுகளை தாக்கி வருகிறது. அதன் தாக்குதலில் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்து விட்டன.

வேட்டை நாய்களை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று பெரியகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை வேட்டை நாய்கள் கடித்துக் கொன்று விட்டன.

அதிகாரிகள் அலட்சியம்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயத்தின் உப தொழிலாகக் கருதப்படும் கால்நடை வளர்ப்பு கோடை காலங்களில் விவசாயிகளுக்கு பெரிதும் கை கொடுத்து உதவுகிறது. அதன் மூலமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வேட்டை நாய்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. அதன் தாக்குதலில் விவசாயிகள் வளர்த்து வந்த கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறது.

வேட்டை நாய்களைப்பிடித்து அழிக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில விவசாயிகள் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். அதற்குரிய நிவாரணமும் அதிகாரிகள் தரப்பில் இதுவரையில் வழங்கப்படவில்லை.

காத்திருப்பு போராட்டம்

வேட்டை நாய்கள் இதுவரையில் இரவு நேரத்தில் மட்டுமே கால்நடைகளை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்ற வேட்டை நாய்களை முற்றிலுமாக அழிப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.


Next Story