அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அகற்ற வேண்டும்- மாநகராட்சிக்கு கோரிக்கை


அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அகற்ற வேண்டும்- மாநகராட்சிக்கு கோரிக்கை
x

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை


தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக, மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், உள்நோயாளிகளாளவும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் நோயாளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தினந்தோறும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகம் மற்றும் வார்டு பகுதிகளிலும் கூட நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாநகராட்சியின் சார்பில் நாய்களை அவ்வப்போது பிடித்து சென்றாலும் கூட, அதே நாய்கள் அடுத்த நாளே மீண்டும் வந்து விடுகின்றன. இதனால், நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, நோயாளிகளின் நலன் கருதி வாரம் இரு முறையாவது நாய்களை பிடிக்கும் வாகனத்துடன் வந்து நாய்களை பிடிக்க வேண்டும். மேலும் பிடிக்கப்படும் நாய்கள் மீண்டும் இங்கு வராத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story