பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு


பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு
x

பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு கொடுத்தனர்.

ஜமாத்தார்கள் மனு

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் 8 ஜமாத்தார்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டை மண்டலம் 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதில் இருந்து ½ கிலோமீட்டர் தூரத்தில் தேவலோக தெருவின் முடிவில் மையவாடி அமைந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மையவாடியில் தேவலோக தெருவில் பெரியவாசலும், கிருபாகரன் தெரு முடிவில் ஒரு வாசலும் உள்ளது. இந்த பகுதியில் 10 அடி அகலத்தில் பொது நடைபாதை இருந்தது. தற்போது அதனை ஆக்கிரமித்து விட்டனர். இதனால் அந்த வழியாக இறந்தவர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்து செல்ல ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நாய் தொல்லை

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நெல்லை தொகுதி தலைவர் முகம்மது அசனார் தலைமையில் கொடுத்த மனுவில், நெல்லையை அடுத்த பேட்டை 18, 19, மற்றும் 20-வது வார்டுகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. முகமது நயினார் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. மேலும் ரஹ்மான் பேட்டை பகுதியில் வீதியில் சுற்றித்திரிந்த 6-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கடித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story