வணிகம் செய்வது குடிமக்களின் அடிப்படை உரிமை: வாரச்சந்தைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு
வணிகம் செய்வது குடிமக்களின் அடிப்படை உரிமை: வாரச்சந்தைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரையை சேர்ந்த தவமணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருப்பரங்குன்றம் தாலுகாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செங்குன்ற நகர், ஹார்விபட்டி பகுதியில் எந்தவித முறையான அனுமதியும் பெறாமல் காய்கறி வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் மனுதாரர் அவர் சார்பில் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். மற்றவர்கள் சார்பில் அவர் ஆஜராக முடியாது. அதுமட்டுமல்லாமல் வர்த்தகம் மற்றும் வணிக ரீதியிலான நடவடிக்கையை கோர்ட்டு தடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் காய்கறி சந்தை, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தையாகவே செயல்படுகிறது. மனுதாரர் வழக்கு தாக்கல் செய்து விட்டார் என்பதற்காக மட்டுமே அதை தடுக்க உத்தரவிட முடியாது. அவ்வாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டால் அது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒவ்வொரு குடிமகனுக்கும் வர்த்தகம் மற்றும் வணிகம் மேற்கொள்வதற்கு அடிப்படை உரிமை உள்ளது என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.