சமையலர் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்


சமையலர் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
x

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தில் சமையலர் பணிக்கு யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலை சிற்றுண்டி திட்டம்

முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி மற்றும் சோளிங்கர் ஆகிய வட்டாரங்களில் வருகிற 1-ந் தேதி முதலும், இரண்டாம் கட்டமாக வாலாஜா, திமிரி மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் 15.7.2023 முதலும் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

காலை சிற்றுண்டித் திட்டத்தில் சமையல் செய்யும் பணி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சமையல் செய்யும் பணிக்கு தகுதிகளையுடைய மகளிரை, சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு, கிராம அளவிலான முதன்மைக் குழு, பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழுவின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதிகள்

சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கவேண்டும். சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவரின் மகன் அல்லது மகள், சம்மந்தப்பட்ட பள்ளியில் 1 முதல் 4-ம் வகுப்பு வரை பயில வேண்டும். சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சியில் வசிக்க வேண்டும்.

மேற்காணும் தகுதிகளை உடையவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. தேர்வு செய்யப்படும் நபர்களின் மகன் அல்லது மகள் அப்பள்ளியில் தொடக்க கல்வி பயிலும் வரை மட்டுமே, சமையல் பணிசெய்ய அனுமதிக்கப்படுவர். சமையலரின் மகன் அல்லது மகள் 5 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 6 -ம் வகுப்பிற்கு சென்றுவிட்டால், சமையலர் பணியிலிருந்து நீக்கப்படுவர்.

ஏமாற வேண்டாம்

காலை சிற்றுண்டி உண்ணும் மாணவர்களின் தாய்மார்களுக்கு மட்டுமே சமையலர் பணி வழங்கப்படும். முற்றிலும் தகுதியானவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் எவ்வித கையூட்டுக்கும் இடமில்லை. ஆதலால், பொதுமக்கள் யாரும் பணிநிரந்தம் செய்யப்படும் என நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story