வருமான வரித்துறையில் ஆள்சேர்ப்பு தொடர்பான போலி தகவல்களை நம்ப வேண்டாம் - வருமான வரி ஆணையர்


வருமான வரித்துறையில் ஆள்சேர்ப்பு தொடர்பான போலி தகவல்களை நம்ப வேண்டாம் -  வருமான வரி ஆணையர்
x

வருமான வரித்துறையில் ஆள்சேர்ப்பு தொடர்பான போலி தகவல்களை நம்ப வேண்டாம் என கூடுதல் வருமான வரி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூடுதல் வருமான வரி ஆணையர் (சென்னை தலைமையகம்) வி.வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகிறது. வருமான வரி அதிகாரி பணியிடம் முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. அந்தப் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை.

மேலும், வருமான வரித்துறையில் உள்ள பல்வேறு 'கெசடட்' அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு, பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) மேற்கொள்ளப்படுகிறது. வருமான வரித்துறையில் உள்ள 'குரூப்-ஏ' பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான செயல்முறை, யூ.பி.எஸ்.சி. மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, எஸ்.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை பொதுமக்கள் பார்க்க வேண்டும். ஆள்சேர்ப்பு செயல்முறை குறித்து சந்தேகம் இருந்தால், அந்த அலுவலகங்களைத் தொடர்புகொள்ள வேண்டும்.வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் எந்தவொரு இடைத்தரகர்கள், நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையில் விழ வேண்டாம்.

மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவோ வரும் தவறான விளம்பரங்கள், கடிதங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படும் போலியான செய்திகளுக்கு பொதுமக்கள் இறையாகிவிட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story