செங்கோல் விவகாரத்தில் புனைக்கதைகளை நம்ப வேண்டாம்


செங்கோல் விவகாரத்தில் புனைக்கதைகளை நம்ப வேண்டாம்
x

செங்கோல் விவகாரத்தில் புனைக்கதைகளை நம்ப வேண்டாம் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

செங்கோல் விவகாரம்

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.

செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைக்கதைக்கு மேலும் ஜோடிச்சு ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.

நினைவு பொருட்கள்

வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன.

அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ந் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.

தங்க கோல்

அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்' என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்' என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைக்கதைகள். அந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு அமித்ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி. பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தத்தை தருகிறது. டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த சர்ச்சைகளை பொருட்படுத்த தேவையில்லை. அவர் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தான் சென்றார்.

நூலகம் கட்டுதல்

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்டவை. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் திருமயத்தில் ரூ.2 கோடியில் புதிய நூலக கட்டிடம் கட்டுதல், ஆலங்குடி தொகுதியில் கொத்தமங்கலத்தில் ரூ.1¼ கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் தொடர்பாக அதிகாரிகளுடன் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.


Next Story