அப்படியே சாப்பிடாதீங்க..ஆபத்து.
அப்படியே சாப்பிடாதீங்க..ஆபத்து.
போடிப்பட்டி
தக்காளி கிலோ என்ன விலை அண்ணாச்சி..என்று கேட்டுக் கொண்டே அருகில் இருக்கும் வெண்டைக்காயையோ கேரட்டையோ எடுத்து சாப்பிடுவது இயல்பாக நடக்கும் விஷயம். ஆனால் இன்றைய நிலையில் இப்படி காய்கறிகளை பச்சையாக, அப்படியே சாப்பிடுவது ஆபத்தானது என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ரசாயன உரங்கள்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
'உணவே மருந்து என்ற நிலையிலிருந்து மருந்தே உணவு என்ற நிலையை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மருந்துக்கு முன் கொஞ்சம் சாப்பாடு, மருந்துக்குப் பிறகு கொஞ்சம் சாப்பாடு என்று பல வண்ணங்களில் ஏராளமான மாத்திரைகளை விழுங்கி வாழ்க்கையை நகர்த்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.நான் சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட்டாலும் பலன் இல்லையே என்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.ஆனால் என்னதான் நடக்கிறது என்று ஆய்வு செய்யும்போது காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்யாமல் அப்படியே சாப்பிடும்போது பலவிதமான நச்சுக்கள் நம் உடலுக்குள் செல்வது தெரிய வருகிறது.காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்யும் பல விவசாயிகள் அதிக மகசூல் பெறும் ஆசையில் வேளாண்மைத்துறையினர் பரிந்துரைக்கும் அளவை விட பல மடங்கு அதிக அளவில் ரசாயன உரங்களை மண்ணில் இடுகின்றனர்.இதற்கு விவசாயிகளின் அறியாமையைப் பயன்படுத்தி பணம் பண்ண நினைக்கும் ஒருசில உரம் விற்பனையாளர்களும் காரணமாக இருக்கின்றனர்.மேலும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த அதிக அளவில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.இவற்றின் எச்சங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் படிந்து விடுகின்றன.
விஷமாகும் மண்
காய்கறிகளை அறுவடை செய்வதற்கு 10 அல்லது 15 நாட்களுக்கு முன் மருந்து தெளிப்பதை நிறுத்தினால் மட்டுமே பூச்சி மருந்துகளின் தாக்கம் விளைபொருட்களில் படிந்திருப்பதைத் தடுக்க முடியும்.ஆனால் பல விவசாயிகள் அறுவடைக்கு முந்தைய தினம் வரை மிகச் சாதாரணமாக பூச்சி மருந்துகளைத் தெளிக்கிறார்கள்.குறிப்பாக காலிபிளவர், கத்தரிக்காய், திராட்சை போன்றவற்றுக்கு கடைசி நேரம் வரை மருந்து தெளிக்கப்படுகிறது.இவ்வாறு காய்கறிகளுக்குப் பயன்படுத்தும் பல பூச்சிக்கொல்லி மருந்துகள் அரசால் தடை செய்யப்பட்ட அதிக வீரியம் மற்றும் பக்க விளைவுகள் கொண்ட மருந்துகள் என்று கூறப்படுகிறது.இவ்வாறு மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது பூச்சி மருந்துகளின் எச்சம் நம் உடலில் சேர்ந்து பாதிப்புகளை உண்டாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு முன் காய்கறிகள் மற்றும் பழங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு சாப்பிடுவது மருந்துகளின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.அதேநேரத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மண்ணில் தங்கி மண்ணை விஷத்தன்மையுள்ளதாக மாற்றி வருகிறது.இவ்வாறு மண் விஷத்தன்மையுள்ளதாக மாறும்போது அதில் பயிரிடப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் உள்ளே வரை அந்த ரசாயன நஞ்சு ஊடுருவும் அபாயம் உள்ளது.இதுதவிர லாப நோக்கத்துக்காக விற்பனையாளர்கள் மூலம் புகுத்தப்படும் நஞ்சு ஒரு வகையாகும்.காய்கறிகளை பளபளப்பாகக் காட்டவும், விரைவில் வாடி விடாமல் தடுக்கவும் ஒருசிலரால் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இதுபோக பழங்களைப் பழுக்க வைக்கவும் கேடு தரும் ரசாயனங்கள் பலவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
விழிப்புணர்வு
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டர் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.ஆனால் ஆப்பிளைப் பளபளப்பாகவும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க பூசப்படும் மெழுகு போன்ற ரசாயனம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் வீட்டுக்கு சென்றாக வேண்டும் என்று பழமொழியை மாற்றும் நிலை ஏற்படக்கூடும்.வெண்டைக்காய், மிளகாய், பட்டாணி, கீரை போன்றவற்றில் தொழிற்சாலைகளிலும் துணிகளிலும் பயன்படுத்தக் கூடிய ஒருவித ரசாயன சாயத்தை ஒருசில பகுதிகளில் பயன்படுத்தியுள்ளனர்.இந்த ரசாயனம் மீன் வளர்ப்பில் பூஞ்சைத் தொற்றை அழிப்பதற்கு பயன்படுத்தக் கூடியதாகும்.மேலும் மாம்பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு கல், வாழைப்பழங்களைப் பழுக்க வைக்க எத்திலீன் கலந்த ரசாயன ஸ்பிரே என ரசாயனங்களின் பட்டியலில் நீள்கிறது.இதேநிலைதான் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரளா அரசு தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருக்கிறது என்று கூறி தமிழக காய்கறிகளுக்கு தடை விதித்தது நினைவு கூறத்தக்கது.இனிவரும் காலங்களில் இதுபோன்ற அவலம் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளிடையே ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களை தொடர்ந்து கண்காணித்து தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பரிந்துரைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.காய்கறிகள் மற்றும் பழங்களின் மீதுள்ள நச்சுத்தன்மையை கண்டறியும் ஆய்வகங்களை அனைத்து பகுதிகளிலும் நிறுவ வேண்டும்.குறிப்பாக உழவர் சந்தை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக நமக்குத் தேவையான காய்கறிகளை முடிந்தவரை நமது வீட்டில் இயற்கை முறையில் விளைவிப்பதற்கு முன்வர வேண்டும்.அப்போது தான் பச்சைக்காய்கறிகளை அப்படியே சாப்பிட முடியும்.