தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்க கூடாது


தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்க கூடாது
x

வாவிபாளையம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்

பொங்கலூர்

வாவிபாளையம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் நேற்று அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாவிபாளையம் ஊராட்சியில் காலை 11 மணிக்கு ஊராட்சி தலைவர் கலாமணி முன்னிலையில் கிராம சபை கூட்டம் தொடங்கியது. இதில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் வாலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்கடை பகுதியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ஆடை (டயாபர்) தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிராம சபைக்கு திரண்டு வந்த பொதுமக்கள் தொழிற்சாலை இங்கு தொடங்குவதற்கு வரைபட அனுமதி மற்றும் தொழில் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கிராம சபையில் 378- வது தீர்மானமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்

இதில் வாவி பாளையம் ஊராட்சி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதாலும், இதற்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளதால் இங்கு தொழிற்சாலை தொடங்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏக மனதாக பொதுமக்கள் ஆதரவுடன் தொழிற்சாலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story