'ஆன்லைன்' விளையாட்டில் பணத்தை இழக்க வேண்டாம் - கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை


ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழக்க வேண்டாம் - கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை
x

‘ஆன்லைன்’ விளையாட்டில் போலீசார் பணத்தை இழக்க கூடாது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.

நிதி மேலாண்மை வகுப்பு

'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டில் போலீசாரும் அடிமையாகி வருகின்றனர். பணத்தை இழந்த போலீசார் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை போலீஸ்துறையில் பணியாற்றும் போலீசார் தங்களுடைய வருமானத்தை வீண் செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு நிதி மேலாண்மை வகுப்புகள் நடத்திட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிதி மேலாண்மை வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது:-

போலீசார் தங்களது சம்பளத்தை வீண் செலவு செய்யக் கூடாது. பயனுள்ளவைகளுக்கு மட்டும் செலவு செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை நல்ல முறையில் சேமிக்க வேண்டும்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீண் விரயம் செய்யக் கூடாது. குறிப்பாக 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழக்க கூடாது. போலீசாரிடம் சேமிப்பு பழக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்த வகுப்பு நடத்தப்படுகிறது. இதுபோல வாரந்தோறும் 150 போலீசாருக்கு இந்த வகுப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாடம் நடத்திய பேராசிரியர்

சரியான சேமிப்பு முறை, இதனால் ஏற்படும் எதிர்கால நன்மைகள் குறித்து நிதி மேலாண்மைத்துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் நரேந்திரா போலீசாருக்கு பாடம் எடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை கூடுதல் கமிஷனர் ஜெ.லோகநாதன், துணை கமிஷனர்கள் எஸ்.ஆர்.செந்தில்குமார், கே.சவுந்தரராஜன் மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த 150 போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story