ராஜீவ்காந்தி கொலையாளியான வெளிநாட்டவருக்கு தமிழகத்தை புகலிடம் ஆக்கிவிட வேண்டாம் -அண்ணாமலை
விடுதலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி கொலையாளியான வெளிநாட்டவருக்கு தமிழகத்தை புகலிடம் ஆக்கிவிட வேண்டாம் என்று முதல்-அமைச்சருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 142-ம் பிரிவின் கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 6 குற்றவாளிகளையும், பேரறிவாளனின் விடுதலையை காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட்டு தற்போது விடுதலை செய்துள்ளது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்திருப்பதை பா.ஜ.க. புரிந்துகொள்கிறது. ஆனாலும் அந்த குற்றவாளிகளை நிரபராதி என்று விடுதலை செய்யவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். சுப்ரீம் கோர்ட்டு இந்த தீர்ப்புகளை வழங்கியதும் காங்கிரஸ் கட்சி காட்டும் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது.
புகலிடம் வேண்டாம்
பேரறிவாளன் விடுதலை ஆனதும் அவரை கட்டி அணைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பை பரிமாறினார். அதைக் கண்டிக்க முதுகெலும்பில்லாமல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. மீதம் 6 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை காங்கிரசின் மூத்த தலைவர்கள் அரைமனதுடன் கண்டித்தாலும், அவர்களின் உண்மையான தலைமையும், அவரது பிள்ளைகளும் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகவும், சிறையில் இருந்து விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு தேசிய ஒருமைப்பாட்டைவிட தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது. அரசியலமைப்பு சாசனம் தனக்கு வழங்கியுள்ள பொறுப்புகளையும், நமது தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு தமிழகத்தை புகலிடம் ஆக்கிவிட வேண்டாம் என்றும் முதல்-அமைச்சரை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.