மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பதற்றம் அடைய வேண்டாம்; அமைச்சர் அறிவுரை


மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பதற்றம் அடைய வேண்டாம்; அமைச்சர் அறிவுரை
x

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

ஊட்டி,

ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நேற்று அங்கு நடைபெற்ற 30 கி.மீ. மாரத்தானில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் 50-க்கும் கீழே இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 139 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உள்நோயாளிகள், புறநோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தமிழகத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, மருந்து, மாத்திரை வசதி ஆகியவை மிகப்பெரிய அளவில் தயார்நிலையில் உள்ளன. ஏற்கனவே கொரோனா 2-வது அலையில் பெற்ற அனுபவத்தை வைத்து, அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'எக்ஸ்.பி.பி.', 'பி.ஏ.2' வைரஸ் சிறிய பாதிப்பு ஏற்படுத்துவதால், பொதுமக்கள் பதற்றம் அடையவேண்டாம். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதோடு, டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.

8 முதல் 10 நபர்களுக்கு...

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டம் முறையில் 2 சதவீதம் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக 2 அல்லது 3 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும்போது 8 முதல் 10 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story