தேனாற்றின் குறுக்கே கரை போடக்கூடாது
தேனாற்றின் குறுக்கே கரை போடக்கூடாது என்று மற்றொரு பாசன விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேவகோட்டை,
தேனாற்றின் குறுக்கே கரை போடக்கூடாது என்று மற்றொரு பாசன விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சமாதான கூட்டம்
தேவகோட்டை அருகே களபன்குடி கண்மாய்க்கு அருகே தேனாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த கரையை அகற்றியது தொடர்பாக முத்துநாடு கண்மாய் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருதரப்பினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 21-ந்தேதி சமாதானக் கூட்டம் நடைபெற்றது.அந்த சமாதானக் கூட்டத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது முத்துநாடு கண்மாய்க்கு தேனாற்றிலிருந்து வரும் குளக்காலை நீர் செல்ல ஏதுவாக சீரமைப்பு செய்து கொள்வது என்றும், களபங்குடி, கப்பலூர், கண்ணங்குடி மற்றும் கண்டியூர் கண்மாய்க்கு நீர் வரும் தேனாற்றில் தேரளப்பூர் கிராமத்தின் அருகில் தடுப்பு ஏற்பட்டுள்ளதை அகற்றுவது என்றும், தேனாற்றின் நீர்ப்போக்கினை தடையில்லாமல் செல்ல சீரமைப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் தேனாற்றுக்கு குறுக்கே நீரை பங்கீடு செய்து 6 மாதத்திற்குள் அணைக்கட்டு திட்டமதிப்பீடு தயார் செய்து உடனே கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பபட்டது.
முற்றுகை
இந்த நிலையில் .எங்கள் கண்மாயும் தேனாற்றுப் பாசனத்தால் விவசாயம் செய்யப்படுகிறது. எனவே கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைக்காமல் தேனாற்றில் வருமாறு செய்து எங்கள் விவசாய நிலங்களை காப்பாற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என கப்பலூர் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் களவன்குடி, சாத்தன கோட்டை, கப்பலூர், கன்னங்குடி, கண்டியூர், கட்டவளாகம், இலுப்பகுடி, தேவரேந்தல் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய கண்மாய் பாசன விவசாயிகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை அதிகாலையிலேயே முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
கோட்டாட்சியர் பால்துரை மற்றும் பாசன வடிகால் வாரிய அதிகாரி விக்னேஸ்வரன் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இன்று(புதன்கிழமை) 4 மணிக்கு மறுபடியும் சமாதான கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி முற்றுகை போராட்டம் நடத்தி வருவது தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.