குப்பைகளை கொளுத்தாதீர்கள்...


குப்பைகளை கொளுத்தாதீர்கள்...
x

குப்பைகளை கொளுத்துவதால் பல இடங்களில் பயிர்கள் சேதமாகும் நிலை உள்ளதால், அவற்றை கொளுத்த வேண்டாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி,

குப்பைகளை கொளுத்துவதால் பல இடங்களில் பயிர்கள் சேதமாகும் நிலை உள்ளதால், அவற்றை கொளுத்த வேண்டாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை

பெருகி வரும் மக்கள் தொகையால் குவியும் குப்பைகள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக மாறி வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து உரமாகவும், மறுசுழற்சி பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பல இடங்களில் முடங்கியுள்ளது. இதனால் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல சாலை ஓரங்களில் குப்பைகள் மலை போல குவிந்து கிடப்பதை காண முடிகிறது. வீடுகளில் சேகரித்து சாலை ஓரங்களில் குவிப்பதே சுகாதாரப் பணியாளர்களின் பணி என்றால் அதற்கு எதற்கு சம்பளமாக பெரும் தொகையை செலவு செய்ய வேண்டும். மக்களே சாலை ஓரங்களில் கொட்டி விடுவார்களே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குவியும் குப்பை மலையை கரைப்பதற்கு மிக எளிய வழிமுறையாக, அவற்றை கொளுத்தி விடும் நடைமுறை பல இடங்களில் உள்ளது.ஏற்கனவே புவி வெப்பமயமாதல், காற்று மாசு என பலவிதமான சுற்றுச்சூழல் சவால்களை சந்தித்து வருகிறோம். குப்பைகளைக் கொளுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு சவால் விடுவதுடன், சுகாதார கேடுகளையும் உருவாக்கி வருகின்றனர். மேலும் சாலையோர குப்பைகளை கொளுத்தும் போது பல இடங்களில் மரங்கள் கருகி பாழாகி விடுகின்றன. இதுதவிர புகை மூட்டத்தால் ஏற்படும் விபத்துகள் என பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், கொளுத்தப்படும் குப்பைகளால் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கரும்பு சேதம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இவ்வாறு கொளுத்தப்படும் குப்பைகளிலிருந்து காற்றின் மூலம் பரவும் தீ அருகிலுள்ள விளைநிலங்களுக்குபரவி பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜோத்தம்பட்டி பகுதியில் குப்பையிலிருந்து பரவிய தீயால் பல ஏக்கர் கரும்புப் பயிர்கள் எரிந்து நாசமானது.

மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்துக்கு அருகில் குப்பைகள் கொளுத்தப்பட்டதால் கொழுந்து விட்டு எரிந்த தீ, காற்றின் வேகத்தால் அருகிலுள்ள நெல் வயலையொட்டிய நாணல் புதரில் பரவியது.நல்ல வேளையாக அருகில் செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர்கள் தப்பியது. இப்போதே விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.எனவே தயவு செய்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துங்கள்.ஏற்கனவே விவசாயிகளோடு விதி விளையாடிக் கொண்டிருக்கும் வேதனையான சூழ்நிலையில் நீங்களும் விளையாடாதீர்கள்.

இவ்வாறு விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


Next Story