"வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம்"


வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம் என்று வடமாநில தொழிலாளர்களை தேடிச் சென்று போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேனி

வடமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல்கள் பரவியது. எங்கோ நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்களை தமிழகத்தில் நடந்ததாக விஷமிகள் சிலர் பரப்பியதால் வடமாநில தொழிலார்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இவ்வாறு வதந்தி பரப்பியவர்கள் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலைபார்க்கும் இடங்களில் இந்த வதந்தி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீசாருக்கு, தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில், தேனி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்கி வேலை பார்க்கும் இடங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று நேரில் சென்று அந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வதந்தியை நம்ப வேண்டாம்

பணி புரியும் இடங்களில் தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். தேனியில் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பேசும்போது, "சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்பும் வகையில் புகைப்படம், வீடியோக்களை சிலர் பரப்பி உள்ளனர். அவ்வாறு பரப்பிய நபர்கள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனின் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் தேனி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 9176104100 மற்றும் 8870985100 என்ற எண்களிலும், தனிப்பிரிவு அலுவலகத்தை 9498101570 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். அவ்வாறு தகவல்கள் கொடுத்தால் தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்" என்றார்.

அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் உடனிருந்தார்.


Related Tags :
Next Story