கூட்டம் அதிகரிப்பதற்குள் மதுபாட்டில் வாங்க வேண்டும்:"ஆய்வு என்ற பெயரில்எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்"டாஸ்மாக் கடையில் அதிகாரிகளிடம் மதுபிரியர்கள் வாக்குவாதம்


கூட்டம் அதிகரிப்பதற்குள் மதுபாட்டில் வாங்க வேண்டும்:ஆய்வு என்ற பெயரில்எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்டாஸ்மாக் கடையில் அதிகாரிகளிடம் மதுபிரியர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:46 PM GMT)

கூட்டம் அதிகரிப்பதற்குள் மதுபாட்டில் வாங்க வேண்டும், ஆய்வு என்ற பெயரில் எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கடலூரில் டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகளிடம் மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

11 டாஸ்மாக் கடைகள் மூடல்

குடி, குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று தெரிந்தே மது பிரியர்கள் குடித்து வருகின்றனர். மதுவின் பாதையில் தடுமாறி செல்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தான் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடி உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இது ஒரு புறம் இருக்க மது பிரியர்களோ, டாஸ்மாக் கடைகளை மூட கூடாது என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் குறித்த பலகை வைக்க வேண்டும், பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கக்கூடாது என்றும் அரசு அறிவித்தது. இதை கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் மாலை கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் கடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் விற்பனையை நிறுத்தி விட்டு அதிகாரிகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தனர்.

நேரத்தை வீணாக்காதீர்கள்

இதை டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் வாங்க வந்த மதுபிரியர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு மதுபிரியர்களில் சிலர், மதுபாட்டில் வாங்க வந்திருக்கிறோம்.

சற்று நேரத்தில் கூட்டம் அதிகமாக வந்து விடும். எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், புறப்பட்டு செல்லுங்கள் என்றனர்.

வாக்குவாதம்

அதற்கு அதிகாரிகள், உங்களுக்காகத்தான் இங்கு வந்து ஆய்வு செய்கிறோம் என்றனர். அதற்கு மதுபிரியர்கள், சில கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்க தான் செய்வார்கள். அதை எல்லாம் தடுக்க முடியாது. ஆய்வு என்ற பெயரில் எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள். உடனடியாக இங்கிருந்து கிளம்புங்க. நாங்கள் மதுபாட்டில் வாங்க வேண்டும் என்று என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதனால் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story