வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி வீடு, வீடாக நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
மகளிர் உரிமை தொகை
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு, வீடாக வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி முதற்கட்டமாக தொடங்கியது.
சேலம் கன்னங்குறிச்சி சத்யா காலனியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வீடு, வீடாக சென்று வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனருமான சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விண்ணப்ப பதிவு முகாம்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாக வினியோகம் செய்யும் பணி சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளி கூட விடுபடக்கூடாது என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படை பணிகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகள் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரேஷன் கடையில்
சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியிலும் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வீடு, வீடாகச் சென்று நேரடியாக வழங்கி வருகின்றனர். டோக்கன் மற்றும் விண்ணப்பம் பெற்றுக் கொண்டவர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பப் பதிவு சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தங்களுக்கான ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வழங்கலாம்.
இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.