கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வீடு, வீடாக வினியோகம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வீடு, வீடாக வினியோகம்
x
தினத்தந்தி 20 July 2023 8:30 PM GMT (Updated: 20 July 2023 8:30 PM GMT)

கோவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 1,401 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 839 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன்கார்டு தாரர்களுக்கு விண்ணப்பபடிவம் வழங்கும் பணி நேற்று தொடங்கி விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

டோக்கன் வழங்கும் பணி

இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 ரேஷன்கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு 1,401 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 839 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கியது.

ரேஷன் கடை பணியாளர்கள் காலையில் கடையில் பொதுமக்களுக்கு ரேஷன்பொருட்களை வழங்கிவிட்டு, மதியத்திற்கு பின்னர் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்குகின்றனர். அந்த டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்திற்கு வர வேண்டும் மற்றும் முகாம் நடைபெறும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.

2-ம் கட்ட முகாம்

இதுதவிர விண்ணப்ப பதிவு முகாமிற்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்து கூறி வருகின்றனர். வங்கி கணக்கு தொடங்காதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமானது 24-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை நடைபெறும்.

2-ம் கட்டமாக 562 ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட ரேஷன்கார்டு தாரர்களுக்கு விண்ணப்ப பதிவு முகாம் அடுத்த மாதம் 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறும். முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்களுக்கு உதவி செய்தவற்காக மொத்தம் 2,979 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 5 கடைக்கு ஒரு பகுதி அலுவலர், 15 கடைக்கு ஒரு வட்டார அலுவலர் மற்றும் ஒவ்வொரு வட்டத்திற்கும் அந்தந்த தாசில்தார்கள் இந்த முகாம் கண்காணிப்பு பணியினை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story