வரதட்சணை கொடுமை, 2-வது திருமணம் செய்த வழக்கில் கணவர் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை கோபி கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கொடுமை, 2-வது திருமணம் செய்த வழக்கில் கணவர் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை   கோபி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Oct 2023 2:23 AM IST (Updated: 20 Oct 2023 2:23 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையில் 2-வது திருமணம் செய்த வழக்கில் கணவர் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ஈரோடு

வரதட்சணை கொடுமை மற்றும் 2-வது திருமணம் செய்த வழக்கில் கணவர் உள்பட 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வரதட்சணை

கோபி ராமநாதன் வீதியைச் சேர்ந்தவர் ஆயிஷா (வயது 27). இவருக்கும், கோவையை சேர்ந்த யாசர் அர்பாத் (40) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி அன்று கோபியில் திருமணம் நடைபெற்றது. அப்போது ஆயிஷாவுக்கு 55 பவுன் நகை மற்றும் கட்டில், மெத்தை ஆகியவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு ஆயிஷாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

2-வது திருமணம்

மேலும் நூருல் பாஷா (60) என்பவருடைய மகள் சப்னாவை (37) யாசர் அர்பாத் 2-வது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து ஆயிஷா கோபியில் உள்ள முதலாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி, ஆயிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக யாசர் அர்பாத், அவருடைய தாய் சம்சாத் பேகம், தந்தை தஸ்தகீர் ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

சிறை தண்டனை

மேலும் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய உடந்தையாக இருந்ததாக யாசர் அர்பாத்தின் உறவினர் முகமது இப்ராஹிம் கான் (72), 2-வது மனைவி சப்னா (37), அவரது தந்தை நூருல் பாஷா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story