குளிர்பானம் என நினைத்து விஷத்தை குடித்த பெண் டாக்டர் பலி


குளிர்பானம் என நினைத்து விஷத்தை குடித்த பெண் டாக்டர் பலி
x

வால்பாறையில் குளிர்பானம் என நினைத்து விஷத்தை குடித்த பெண் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் மதுஅருமைராஜ்குமார். இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜாஸ்மின் (வயது 67). டாக்டர். இவர் அந்த எஸ்டேட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கடந்த மாதம் 30-ந் தேதிதான் ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் அவர்கள் வசித்து வந்த எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான வீட்டை காலி செய்து விட்டு தங்களின் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு செல்ல கணவன்-மனைவி 2 பேரும் முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கூலி ஆட்கள் மூலம் காலி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குளிர்பானம் என நினைத்து

இந்த நிலையில் அவர்கள் தங்களது வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தெளிப்பதற்காக பூச்சி மருந்து (விஷம்) வைத்திருந்தனர். அதனை எடுத்து வீட்டில் குளிர்பானம் வைக்கும் பகுதியில் வைத்திருந்தாக தெரிகிறது. அப்போது குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை எடுத்து ஜாஸ்மின் குடித்தார்.

இதனால் அவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதனை கவனித்த அவரின் கணவர் மற்றும் சக தொழிலாளர்கள், ஜாஸ்மினை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிதாப சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜாஸ்மின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story