டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை பசுமை தாயகம் நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சோளிங்கர் ஒன்றியம், தாளிக்கால் கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத தாளிஸ்வரர், சோளிங்கர் யோக நரசிம்மர் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மேலும் தாளிக்கால், போளிப்பாக்கம், அய்யந்தாங்கல், பணவட்டம்பாடி, தப்பூர், பிள்ளையார்குப்பம், கோவிந்தாங்கல், நெறிஞ்சந்தாங்கல், ஆயல், மேட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் டாக்டர் ராமதாஸின் 84-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 840 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இப்பள்ளிகளில் உள்ள 1,840 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்புகள் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. கொடிகள் ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வடிவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் சக்கரவர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் எல்.கே.கார்த்திக்ராஜா உள்பட பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய செயலாளர் பாபு நன்றி கூறினார்.