டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி நாள் விழா


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி நாள் விழா
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

உடற்கல்வியியல் துறையில் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி நாள் விழாவில் தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் பேசினார்.

கல்லூரி நாள் விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்லூரி நாள் விழா, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் உள்ள சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வரவேற்று பேசினார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

விழாவில் சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் மு.சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி

மாணவர்களுக்கு எளிதில் நன்கு புரியும்படி பாடங்களை ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும். அத்தகைய ஆசிரியர்களைத்தான் மாணவர்களுக்கும் பிடிக்கும். மாணவர்களாகிய நீங்களும் எதிர்காலத்தில் மாணவர்கள் விரும்பும் ஆசிரியர்களாக திகழ வேண்டும்.

உடற்கல்வியியல் துறையில் அதை சார்ந்த பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக பயோ மெக்கானிக்ஸ் மற்றும் எக்சர்சைஸ் பிசியாலஜி போன்ற அறிவியல் பூர்வமான பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவித்தால் ஒலிம்பிக் மற்றும் அதற்கு இணையான போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்டு மலர் வெளியீடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆண்டு மலர்களை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் வெளியிட்டார். அவற்றை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் பெற்று கொண்டார்.

தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றிய அலுவலர்கள், டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. கல்வி மற்றும் விளையாட்டு ேபாட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் நன்றி கூறினார்.


Next Story