திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா நேற்று தொடங்கியது. இத்திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதில் கவின் கலை, வில்லிசை, புல்லாங்குழல், நாதஸ்வரம், வீணை, வயலின், குழு போட்டிகள், நடனம், பாட்டு, நாடகம், பேச்சு, கவிதை, கட்டுரை, கதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. இதில், திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் மொத்தம் 1,049 பேர் பங்கேற்கின்றனர். இப் போட்டிகள் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் என 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்க விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு, திருச்செந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் பேபி தலைமை தாங்கினார். வட்டாரக்கல்வி அலுவலர் சுபா ஸ்ரீ முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, தூத்துக்குடி கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஜெகதீஸ் பெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் நபில்புகாரி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் இந்து நிஷா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராணிபுஷ்பம், ஜெயலட்சுமி, ஜெயஹலன், மேடையாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.