வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 8 லட்சத்து 92 ஆயிரத்து 935 வாக்காளர்கள்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 8 லட்சத்து 92 ஆயிரத்து 935 வாக்காளர்கள்
x

கரூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 8 லட்சத்து 92 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூர்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரபுசங்கர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 33 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 813 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 89 என மொத்தம் 8 லட்சத்து 92 ஆயிரத்து 935 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 1,047 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் வாக்காளர்களின் வசதிக்கேற்ப வருகிற 12,13,26,27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் 621 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

முகவரி கட்டாயம்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைள் மற்றும் ஆட்சேபனை பணிகள் தொடர்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும், ஒரு நாளைக்கு தலா 10, அதிகபட்சமாக 30 வடிவங்கள் வரை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து கோரிக்கை மனுக்களிலும் வாக்காளர் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூறும் மனுதாரர் 21 வயதிற்கு மேற்பட்டவராயின் அவர் முன்பு சாதாரணமாக வசித்து வந்த முகவரியை கட்டாய படிவம் 6-ல் குறிப்பிட வேண்டும்.

ஆதார் எண் இணைப்பு

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, தற்போது முகவரி மாற்றம் கூறும் வாக்காளர்கள் அவர் முன்பு சாதாரணமாக வசித்து வந்த முகவரி மற்றும் புகைப்பட அடையாள அட்டை என்ைண கட்டாய படிவம் 8-ல் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை10மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம். முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக படிவம் 6-பி பெற்று தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தனித்துணை கலெக்டர் சைபுதீன் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, வட்டாட்சியர் விஜயா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story