5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்


5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.

வாக்குச்சாவடி பட்டியல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தி நேற்று வெளியிட்டார். அதன்படி 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் உள்ளன. 878 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 184 வாக்குச்சாவடி மையங்களும், 272 வாக்குச்சாவடிகளும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 178 வாக்குச்சாவடி மையங்களும், 294 வாக்குச்சாவடிகளும், தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் 161 வாக்குச்சாவடி மையங்களும், 306 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 184 வாக்குச்சாவடி மையங்களும், 314 வாக்குச்சாவடிகளும், அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 171 வாக்குச்சாவடி மையங்களும், 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகள்

இது தொடர்பாக கலெக்டர் சாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 2024 தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி புதிய பாகங்களை உருவாக்குதல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாறுதல் செய்தல்,

வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல், பகுதி மறுசீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே வரைவு வாக்குச்சாவடி வெளியிடப்பட்ட நாளில் இருந்து 7 தினங்களுக்குள் அந்த பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை அல்லது எதிர்ப்பு ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக அளிக்கலாம்.

கள ஆய்வு

விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் அக்கோரிக்கையின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான இனங்களாக இருப்பின் அந்த கோரிக்கைகள் ஏற்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் வரப்பெறாத கோரிக்கைகள் பரிசீலனுக்கு உட்படுத்தப்படாது.

சட்டமன்றம் வாரியாக வரப்பெறும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு இறுதியாக வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த விவரமானது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் அந்த மாற்றங்கள் இறுதிச் செய்யப்பட்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது உதவி கலெக்டர்கள் கீதாராணி (தர்மபுரி), ராஜசேகர் (அரூர்), தேர்தல் தனி தாசில்தார் அசோக்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தாஸ் (தி.மு.க.), விஜயன் (அ.தி.மு.க.), வெங்கட்ராஜ் (பா.ஜனதா), ஜெய்சங்கர் (காங்கிரஸ்), சுதர்சனம் (இந்திய கம்யூனிஸ்டு) மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story