அரியலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது
அரியலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. ஆட்சேபனை இருந்தால் 6-ந்தேதிக்குள் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளன. இச்சீரமைக்கும் பணியின் போது கிராமப்புற, நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகப்பட்சமாக 1,500 வாக்காளர்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500-க்கு மேல் இருப்பின் அந்த வாக்குச்சாவடி 2-ஆக பிரிக்கப்பட உள்ளது. 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் வாக்குச்சாவடி மையம் அமைந்திருந்தாலும் அல்லது வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள கட்டிடம் சிதிலமடைந்திருந்தாலும் மாற்றம் செய்யப்பட உள்ளன. மேலும் தற்போது உள்ள வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளின் தரம் உயர்தப்பட்டிருப்பின் இவ்விவரம் குறித்தும் மாற்றம் செய்யப்பட உள்ளன. மேற்படி காரணிகளின் அடிப்படையில், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்களை கொண்டு வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படவுள்ள விவரங்கள் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் கடந்த 29-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. எனவே மேற்குறித்த மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் கோரிக்கை மனுக்களை வருகிற 6-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் மனுவாக அளிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.