கவர்னர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்


சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் நாகரீகத்தோடு வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து, சுற்றி இருந்தோர் "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாக முழக்கங்களை எழுப்ப பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதல்-அமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும் ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். கவர்னர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு தொடங்க வேண்டும் என்பது தான் மரபு என்றார்.

மேலும், தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு, அதை சட்டமாக்கிய அண்ணாவுக்கும் பெருமை உண்டு. அதை தமிழர்களாக காப்பாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது. ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்க்கொள்ள வேண்டும். பொங்கல் எப்படி இனிமையாக உள்ளதோ அதுபோலவே இணையதளங்களில் தமிழ் இனிமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story