இறந்த கோழிகளை கால்வாயில் வீசி சென்ற மர்மநபர்கள்


இறந்த கோழிகளை கால்வாயில் வீசி சென்ற மர்மநபர்கள்
x

வள்ளியூர் அருகே இறந்த கோழிகளை கால்வாயில் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே ஆ.திருமலாபுரத்தில் ஊருக்கு வெளிப்புறத்தில் வடமலையான் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தன. அவற்றை நாய்கள் உள்ளிட்டவை இழுத்து வந்து சாலைகளில் போட்டு செல்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'கால்வாயில் மர்மநபர்கள் இறந்த கோழிகளை வீசி சென்றுள்ளனர். இந்த கோழிகள் நோய்கள் தாக்கி இறந்ததால் அவற்றை இங்கு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இறந்த கோழிகளால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் கோழிகளை உடனடியாக அகற்றி அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்' என்றனர்.


Next Story