மிளகு குளத்தை தூர்வார வேண்டும்

மிளகு குளத்தை தூர்வார வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சுற்றுச்சுவர்-படித்துறையை சீரமைத்து மிளகுகுளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிளகுகுளம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஊராட்சியில் மிளகுகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு மிளகுகுளம் என்ற பெயர் அமைந்ததால் இந்த குளத்தையொட்டிய ஒரு கிராமத்திற்கும் மிளகுகுளம் கிராமம் என்ற பெயர் உருவானது. இந்த மிளகுகுளம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அழகிய தோற்றம் அளிக்கும் குளமாக காட்சி அளித்தது. வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து மிளகுகுளம், பூதமங்கலம், கண்ணுச்சாங்குடி, சேகரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், அந்த பகுதி விவசாயிகள், அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
உடைந்த நிலையில் சுற்றுச்சுவர்-படித்துறை
இக்குளத்தில் கோடை காலங்களிலும் தண்ணீர் வற்றாமல் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் குளத்தின் கரையோரங்களில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் குளத்தில் கட்டப்பட்ட படித்துறை படிக்கட்டுகளில் சேதம் ஏற்பட்டு உடைந்த நிலையில் காணப்படுகிறது.
தூர்வார வேண்டும்
இதனால் கோடை காலங்களில் முறையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. மேலும் குளத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. எனவே குளத்தின் கரையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சேதமடைந்த சுற்றுச்சுவர் மற்றும் படித்துறையை சீரமைத்து குளத்தை தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






