மழைக்காலம் தொடங்கும் முன் வடிகால், கால்வாய்களை தூர்வார வேண்டும்-விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


மழைக்காலம் தொடங்கும் முன் வடிகால், கால்வாய்களை தூர்வார வேண்டும்-விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

மழைக்காலம் தொடங்கும் முன் வடிகால், கால்வாய்களை தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி

மழைக்காலம் தொடங்கும் முன் வடிகால், கால்வாய்களை தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

இழப்பீடு தொகை

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு கலெக்டரிடம் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

பாரதீய கிசான் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், காவிரி மற்றும் கொள்ளிடத்தில் அதிகப்படியான நீர் வரத்தால் லால்குடி, திருவெறும்பூர், அந்தநல்லூர், ஒன்றியங்களில் அதிகப்படியான நெல், வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது, விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை காலங்களில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் ஊக்கத்தொகையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு துறையில் ஏற்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தூர்வார வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், உய்யகொண்டான் பாசன பகுதிகளில் உள்ள கொடியாலம் பாசன மற்றும் வடிகால்கள், புலிவலம், சுப்பராயன் பட்டி பாசன வடிகால்கள், குழுமணி சிவன் கோவில் வாய்க்கால், வயலூர், மருதாண்டாகுறிச்சி உள்ளிட்ட பாசன மற்றும் வடிகால் பகுதிகள் தூர்வாரப்படாததால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையில் இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல்-வாழை உள்ளிட்ட வயல்களில் மழைநீர் தேங்கி விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு மழை காலம் தொடங்கும் முன் வடிகால் கால்வாய்களை தூர் வாரிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், சம்பா சாகுபடிக்கு பெருவளை, அய்யன், பங்குனி, உய்யகொண்டான், புள்ளம்பாடி வாய்க்கால்களிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்கால், ஸ்ரீரங்கம் நாட்டுவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்து, தண்ணீர் சீராக செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக விவசாயிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்ணை கலெக்டர் பிரதீப்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.


Related Tags :
Next Story